மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தவே 5, 8 –ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கொண்டு வந்தோம் முதலமைச்சர் பதிலடி.,.

சென்னை,



    மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கத்தில் தான் 5 ம் வகுப்பு, 8 ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கொண்டு வந்தோம் என்று பேரவையில் தி.மு.க. உறுப்பினர் பொன்முடிக்கு முதலமைச்சர் எடப்பாடியார் பதிலடி
கொடுத்தார்.


தமிழக சட்டபேரவையில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறைக்கான மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் தி.மு.க. உறுப்பினர் பொன்முடி மாநில கல்வி உரிமை, மற்றும் 5 ம் வகுப்பு, 8 ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஆகியவை குறித்து பேசினார். இதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கல்வி தொடர்பான எங்களது கொள்கை தெளிவானது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா வகுத்துதந்த இருமொழிக் கொள்கையில் அவர்கள் வழியில் வந்த முதலமைச்சரும் உறுதியாக உள்ளார். நாங்கள் தைரியம், துணிவோடு தான் இருந்து கொண்டிருக்கிறோம் என்றார்.


அப்போது முதலமைச்சர் எடப்பாடியார்  குறுக்கிட்டு நீங்கள் நன்கு சிந்தித்து பார்க்கவேண்டும். 5 ம் வகுப்பு, 8 ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கொண்டு வந்தது மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு தான். அவர்கள் தேர்வை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதற்காகத் தான். மாணவர்களின் கல்விதரமானது ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு தெரியாது. தேர்வின் மூலம் தான் அவர்களின் தரத்தை அறிந்து கொள்ள முடியும். மாணவர்களின் தரம் பற்றி அறிந்து கொண்டால் தான் அவர்களுக்கு நல்ல கல்வி


வழங்க முடியும். 8 ம் வகுப்பு தேர்வை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை அறிந்து அதற்கேற்ப கல்வி வழங்கினால் தான் அவர்கள் 10 ம் வகுப்பு தேர்வை நல்ல முறையில் எழுதி உயர்கல்விக்கு செல்ல முடியும். 5 ம் வகுப்பு, 8 ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தது அனைவரின் கோரிக்கையை ஏற்றுத்தான்.


அதற்கு நீங்கள் காரணம் அல்ல. 5 ம் வகுப்புக்கு தேர்வு நடத்தினால் என்ன தவறு? தரமான கல்வி கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த தேர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. நீங்கள் தான் அவதூறு பிரச்சாரங்கள் மேற்கொண்டீர்கள். 5 ம் வகுப்பு, 8 ம் வகுப்பு தேர்வை மாணவர்கள் எழுதும் போது தான் அவர்களுக்கு தேர்வு பற்றிய பதட்டம் போகும்.10 ம் வகுப்பு தேர்வை பதட்டம் இல்லாமல் எழுத முடியும். அதற்காகத் தான் அந்த அறிவிப்பை கொடுத்தோம்.


இன்றைய கால கட்டம் வேறு. அன்றைய கால கட்டம் வேறு. இது விஞ்ஞான உலகம். இத்தகைய தேர்வுகளை எழுதினால் தான் மாணவர்கள் போட்டி போட முடியும். அறிவுப்பூர்வமாக மாணவர்களுக்கு கல்வி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் அம்மா அவர்கள் மாணவர்களுக்கு மடிகணினி வழங்கினார். உலகத் தரத்திற்கு கல்வி வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.


கிராமப்புற மாணவர்கள் நன்றாக இருக்கவேண்டும் என்ற அடிப்படையில் நகரில் வசிக்கும் மாணவர்களைப் போல் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது தான் கிராமப்புற மாணவர்கள் நகர்ப்புற மாணவர்களோடு போட்டியிட முடியும்.


நகர்ப்புற மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் நன்கு எழுதி இடத்தை தக்க வைத்துக்கொள்கிறார்கள். கிராமப்புற மாணவர்களும் நகர்ப்புற மாணவர்களுக்கு இணையாக போட்டித் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். அதற்கு மாணவர்களின் தரத்தை தேர்வு மூலம் தான் அறிந்து கொள்ள முடியும். நல்ல கல்வி அறிவு கிடைத்தால் தான் கூடுதல் ,மதிப்பெண்கள் பெற முடியும். அச்சமின்றி தேர்வு எழுதி நகர்ப்புற மாணவர்களுக்கு ஈடு கொடுக்க முடியும். கல்வி அமைச்சர் கூட அந்த தேர்வுகளில் யாரும் பெயில் ஆக்கப்பட மாட்டார்கள் என்று உறுதி அளித்து இருந்தார். இவ்வாறு முதல்வர் பதிலளித்து பேசினார்.